பிரபல தொழில்நுட்ப நிறுவனமான அமெசானில் பணியாற்றி வந்த மரியா ஹர்ஷிதா என்பவர், கடந்த மார்ச் 2026 இல் ஏற்பட்ட திடீர் பணிநீக்க நடவடிக்கையால் தனது வேலையை இழந்தார். தொடக்கத்தில் பல நிறுவனங்களுக்கு வேலை கேட்டு விண்ணப்பித்தும், நேர்காணல்களில் அடுத்தடுத்துத் தோல்வியும் நிராகரிப்புகளுமே மிஞ்சியதால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். வேலை கிடைக்குமா என்ற காலகட்டத்தில் சோர்ந்துபோகாமல், தனது கணவரின் அறிவுறுத்தலின்படி வேறு நிறுவனத்திற்காக வேலை செய்வதை விடச் சொந்தமாக ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு அவர் மாறினார்.
தனது குழந்தைகளுக்குக் கடைகளில் வாங்கும் கலப்பட முட்டைகளைக் கொடுக்க விரும்பாமல், ஆரோக்கியமான நாட்டு முட்டைகளை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் வீட்டின் பின்புறத்தில் சிறிய அளவில் கோழி வளர்ப்பைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஆறு கோழிகளுடன் தொடங்கப்பட்ட இந்தச் சிறிய முயற்சி படிப்படியாக விரிவடைந்து பெரிய கோழிப்பண்ணையாக உருவெடுத்தது. தற்போது தனது பண்ணையில் உற்பத்தியாகும் தூய்மையான முட்டைகளை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து சொந்தமாக லாபம் ஈட்டி வரும் மரியா, இதன் மூலம் வெற்றிகரமான தொழில்முனைவோராகவும் மாறியுள்ளார்.
தாம் முன்பு செய்துவந்த கார்ப்பரேட் வேலைக்கும் தற்போதைய கோழிப்பண்ணைத் தொழிலுக்கும் உள்ள ஒற்றுமையை வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ள மரியா, முன்பு வேறு நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மையைக் கவனித்த தான், தற்போது தனது சொந்தத் தயாரிப்பான முட்டைகளைச் சந்தைப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். தேவைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப விநியோகம் செய்வது மற்றும் பிசினஸ் வியூகங்களை வகுப்பது எனத் தன் பழைய ‘ப்ராடக்ட் மேனேஜ்மென்ட்’ திறமையை இப்போது இந்தத் தொழிலில் பயன்படுத்தி வருவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். இவரின் இந்த ஊக்கமளிக்கும் பயணம் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வைரலாகி வருகிறது.
