மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு தலைமுறைகளாக பெண் குழந்தை பிறக்காத நிலையில், தற்போது பிறந்த குழந்தைக்கு ‘கார்கி’ என பெயரிட்டுள்ளனர். குழந்தையின் பிறப்பை குடும்பத்தினர் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். மருத்துவமனையில் இருந்து தாய் மற்றும் குழந்தை வீடு திரும்பியபோது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்வு அப்பகுதி மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கார்கி மற்றும் அவரது தாயை அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைத்து குடும்பத்தினர் அழைத்து வந்தனர். வழிநெடுகிலும் மேளதாளங்கள் முழங்க, உறவினர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பெண் குழந்தையின் வருகையை குடும்பத்தினர் ஒரு மிகப்பெரிய விழாவைப் போல் கொண்டாடினர். தேர் மலர்கள் உள்ளிட்ட அலங்காரங்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. குழந்தையை மகாராணியைப் போல வரவேற்ற இந்தக் காட்சிகள் அப்பகுதியில் பலரது கவனத்தையும் பெற்றன.
கார்கியின் பாட்டி சுரேகா தஹிஃப்ளே கூறுகையில், குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும்போது மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என குடும்பத்தினர் முடிவு செய்ததாக தெரிவித்தார். கார்கியின் பிறப்பு குடும்பத்துக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். குழந்தையின் தாத்தா லிம்பாஜி தஹிஃப்ளேவும், பல தலைமுறைகளாக பெண் குழந்தைக்காக காத்திருந்த நிலையில் இந்தக் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், குடும்பத்தில் உள்ள மருமகள்களை மகள்களைப் போலவே நடத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கார்கியின் தந்தையும் தனது மகளின் பிறப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். பெண் குழந்தைகள் தந்தையுடன் தனிப்பட்ட பாசத்தைக் கொண்டிருப்பார்கள் என்றும், தனது மகளை பூவைப் போல அன்புடனும் பாசத்துடனும் வளர்ப்பேன் என்றும் அவர் கூறினார். பெண் குழந்தை பிறப்பை குடும்பத்தினர் இவ்வாறு கொண்டாடியிருப்பது, பெண் குழந்தைகள் மீதான சமூகத்தின் பார்வை மாற வேண்டும் என்ற நல்ல செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த கார்கிக்கு அளிக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட வரவேற்பு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
