பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், தற்போது  தனது தோற்றத்திற்காக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது கிங் சார்லஸை சந்திப்பதற்காக லண்டன் உயர் ஆணையத்திற்கு வந்த பாபரின் புதிய தோற்றம் இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள்  மன்னர் சார்லஸை சந்திப்பதற்காக வருகை தந்தனர். அப்போது அணியின் பேருந்திலிருந்து இறங்கி வந்த கேப்டன் பாபர் அசாம், வழக்கமான வெள்ளை நிறச் சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து மிகவும் சாதாரணமாக வந்திருந்தார். உடையைவிட, அவரது ஜெட்-பிளாக் தலைமுடி தான் இணையவாசிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. வழக்கத்தை விட அவரது தலைமுடி அதிக பளபளப்புடனும், ஏதோ அதிகப்படியான ஹேர் ஜெல் அல்லது டை அடிக்கப்பட்டது போலவும் இருந்ததாகக் கூறி நெட்டிசனுகள் அவரை வம்பிழுக்கத் தொடங்கினர்.

 

இவ்வளவு பெரிய உயர் மட்ட சந்திப்பிற்குச் செல்லும்போது சாதாரண உடையும், இந்த விசித்திரமான ஹேர் ஸ்டைலும் தேவையா என்று பலரும் கிண்டலடித்து மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒருபுறம் சமூக வலைதளங்களின் கேலிகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பாபர் அசாம் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி நெருங்கி வரும் நிலையில், அவர் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது உடல்நிலை குறித்து அணியின் நிர்வாகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. ஏற்கனவே லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, அணி நிர்வாகம் 7 வீரர்களை அதிரடியாக நீக்கியதுடன், பயிற்சியாளர்களையும் மாற்றி பெரும் சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், கேப்டன் பாபரின் உடல்நலக் குறைவும், அவரது தோற்றம் குறித்த சமூக வலைதள சர்ச்சைகளும் பாகிஸ்தான் அணிக்கு மேலும் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன