தமிழ்க் கலையின் மீதும் இலக்கியத்தின் மீதும் தீவிர பற்று கொண்டு உலக சாதனைகளைப் படைத்துள்ள பள்ளி மாணவர்களைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் நேரில் அழைத்துச் சிறப்பித்துள்ளார். அசாத்திய திறமையும் அயராத உழைப்பும் கொண்டு குறள் முதல் காப்பியங்கள் வரை சாதனை படைத்த அந்த இளம் திறமையாளர்களை அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அழைத்து மனதாரப் பாராட்டியுள்ளார்.

மாணவர்களின் இந்த மாபெரும் சாதனையானது உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கல்வித்துறையின் சார்பில் முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுளது.

குறிப்பாக, குறுகிய மணிநேரத்திற்குள் உலகப் புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகளை அரங்கேற்றி சாதனை நிகழ்த்திய மாணவர்களின் உழைப்பு வியக்கத்தக்கது. வெறும் 15 மணி நேரத்தில் 1330 திருக்குறள் குறட்பாக்களை முழுமையாக எழுதியும், எந்தவிதத் தடையுமின்றி முழு சிலப்பதிகாரத்தைப் படைத்தும் மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

மேலும், தொல்காப்பியம் முழுவதையும் இடைவிடாமல் வெறும் 21 மணி நேரத்தில் எழுதி முடித்து மாணவர்கள் உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளனர். இந்தச் சாதனைகளைப் படைத்த இளம் தலைமுறையினரைத் திறம்பட ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான அத்தனை உதவிகளையும் அரசாங்கம் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைய தலைமுறையினரின் மறைந்திருக்கும் பன்முகத் திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொணர்வதுடன், அவர்களின் உலகளாவிய சாதனைகளைத் தகுந்த மேடைகள் மூலம் உலகறியச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையும் இலக்கியச் செழுமையும் இளம் தலைமுறையினரின் வழியே புதிய பரிமாணங்களை எட்டிவருவதற்கு இந்த உலக சாதனை மாணவர்களே சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.

“>

 

மாணவர்களின் இந்தச் சாதனைப் பயணம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் மிகப்பெரிய ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.