ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக மோதல் நிலவி வந்த நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத விதமாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு சதித்திட்டத்தின் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த கோரத் தாக்குதலில் ஈரானின் ஆன்மீக மற்றும் உயரிய அதிகாரம் கொண்ட தலைவரான அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.
ஈரானின் உயரிய தலைவராக விளங்கிய காமேனி, பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக ரகசிய இடத்திலிருந்தே தனது பணிகளை மேற்கொண்டு வந்தார். முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே அவர் பொதுவெளியில் தோன்றுவது வழக்கம். இந்நிலையில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சி.ஐ.ஏ. (CIA) காமேனியின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தது.
நேற்று அதாவது சனிக்கிழமை மத்திய தெஹ்ரானில் காமேனி, ராணுவ அதிகாரிகள் மற்றும் முக்கிய ஆலோசகர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த ரகசியத் தகவலை சி.ஐ.ஏ. கண்டறிந்தது. இந்த ‘ஸ்கெட்ச்’ தகவலை சி.ஐ.ஏ. இஸ்ரேல் உளவுத்துறையிடம் பகிர்ந்துள்ளது.
ரமலான் மாதத்தின் புனிதமான வேளையில், இந்தத் தாக்குதல் மின்னல் வேகத்தில் நடத்தப்பட்டது. காமேனி தனது ஆலோசகர்கள் மற்றும் ராணுவ தளபதி முகமது பக்போர் ஆகியோருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, இஸ்ரேல் விமானப்படை அந்த இடத்தின் மீது 30-க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் அந்த கட்டிடம் முற்றிலுமாக சிதைந்து தரைமட்டமானது. இதில் காமேனி மட்டுமன்றி, அவரது மகள், மருமகன், பேரக்குழந்தைகள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் உட்பட மொத்தம் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் நியூயார்க் டைம்ஸ் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பழிவாங்குவது ஈரானின் சட்டப்பூர்வமான உரிமை. இந்த வரலாற்று குற்றத்தைச் செய்தவர்களை ஈரான் தனது முழு பலத்தையும் கொண்டு தண்டிக்கும் என்றார்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், “ஈரான் எங்களைத் தாக்காமல் இருப்பதே அந்த நாட்டிற்கு நல்லது. மீறித் தாக்கினால் இதுவரை உலகம் பார்த்திராத மிக மோசமான தாக்குதலை ஈரான் சந்திக்க நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
