ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில் தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் தரைமட்டமானதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணம், மினாப் நகரில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளியை இலக்கு வைத்து இஸ்ரேலியப் படைகள் நேற்று குண்டுமழை பொழிந்தன. இதில் பள்ளி கட்டிடம் முற்றிலும் சிதைந்ததில், அங்கு பயின்று வந்த 100-க்கும் மேற்பட்ட பிஞ்சுக் குழந்தைகள் உடல் நசுங்கிப் பலியாகினர். இச்சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
வான்வழித் தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத் துறை மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். கடந்த 2025-ஆம் ஆண்டு, அப்போதைய தளபதி உசைன் சலாமி மறைவைத் தொடர்ந்து, புரட்சிகர காவல்படையின் பொறுப்பை பாக்பூர் ஏற்றிருந்தார். தற்போது அவரும் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் ராணுவம் தனது முக்கியத் தலைவர்களை இழந்து தவிக்கிறது.
தாக்குதல் மற்றும் உயிரிழப்புகளைத் தொடர்ந்து, ஈரான் ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் அகமது வாஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அகமது வாஹிதி ஈரானின் முன்னாள் பாதுகாப்பு மற்றும் உள்துறை மந்திரியாகப் பணியாற்றியவர். 2025 அக்டோபர் மாதம் ராணுவத்தின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்ட இவர், தற்போது முழு பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
கடந்த 1994-ஆம் ஆண்டு பியூனஸ் அயர்ஸ் நகரில் 84 பேர் பலியான வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் இவருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி, 2007-ஆம் ஆண்டு முதல் ‘இன்டர்போல்’ (Interpol) அமைப்பு இவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னதாக ஈரான் நாட்டின் புதிய இடைக்கால உச்ச தலைவராக அயதோலா அலிரேசா அராஃபி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரான் – இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நேரடித் தலையீடு மத்திய கிழக்கு ஆசியாவில் பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
