இந்திய ரயில்களில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகையை ₹250-ல் இருந்து ₹500 ஆக இரட்டிப்பாக்கி ரயில்வே நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், இந்த புதிய விதிகள் வரும் ஜூலை 1, 2026 முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன.

மத்திய அரசின் ‘ஜான் விஸ்வாஸ் சட்டம் 2026’-இன் கீழ், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகளின்படி, டிக்கெட் இன்றி பயணிப்பவர்கள் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை பாயும்; மேலும் வேறொருவர் பெயரில் உள்ள டிக்கெட்டைப் பயன்படுத்தினாலும்₹500 அபராதம் விதிக்கப்படும்.

இதுமட்டுமன்றி, பெண்கள் பெட்டியில் அத்துமீறி பயணிக்கும் ஆண்களுக்கு ₹2,500 வரை அபராதம் விதித்து உடனடியாக ரயிலில் இருந்து இறக்கிவிடவும், ரயிலில் மது அருந்திவிட்டு ரகளை செய்பவர்களுக்கு ₹1,000 அபராதம் விதிக்கவும், அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களுக்கு ₹2,000 அபராதம் அல்லது 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இந்த புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரயில்களில் டிக்கெட் இல்லாத பயணத்தைக் குறைத்து, முறையான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.