தமிழக மின்சாரத்துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் நஷ்டங்கள் குறித்த ‘வெள்ளை அறிக்கை’ அடுத்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையின் அவனியாபுரம் பகுதியில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியில் மின்சாரத்துறையில் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததாகவும், குறிப்பாக நெல்லை மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் கண்டறியப்பட்ட அத்தகைய முறைகேடுகள் மீது தற்போதைய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இனிமேல் ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கு ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும், இதற்காக அடுத்த 10 நாட்களுக்குள் முற்றிலும் வெளிப்படையான புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விரைந்து நடவடிக்கை எடுத்து அரசுப் பணத்தைத் திருடியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான நடவடிக்கைக்காக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட கோப்பிற்கு இன்னும் அனுமதி தராமல் இழுத்தடிப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, தி.மு.க.வுடன் இணக்கமாகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும், சி.பி.ஐ. அமைப்பும் தி.மு.க.வும் மறைமுகமாகக் கைகோர்த்துள்ளனவா என்ற கேள்வி எழுவதாகவும் சாடிய அவர், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.
