அமெரிக்காவில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர், சமீபத்திய தொழில்நுட்ப நிறுவனப் பணிநீக்கங்களால் வேலையை இழந்துள்ள நிலையில், தன் குடும்பத்துடன் இந்தியா திரும்புவதா அல்லது அங்கேயே தங்குவதா என்ற குழப்பத்தில் சமூக வலைத்தளத்தில் ஆலோசனைக் கேட்டுள்ளார்.

கையில் ஐந்து மாதங்களுக்கான நிதி மட்டுமே உள்ளதாகவும், தற்போதைய சூழலில் வேலை கிடைப்பது கடினம் என்பதால் இந்தியா திரும்புவதைத் திட்டமிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் அவர் வாங்கிய வீடு தற்போது சந்தை மதிப்பை விடக் குறைவாக இருப்பதால், அதை விற்பது நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும், அதே சமயம் அங்கேயே விட்டுவிட்டுச் செல்வது நிர்வாக ரீதியாகப் பெரிய சவாலாக இருக்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

அவரது மற்றொரு பெரிய கவலை குழந்தைகளைப் பற்றியதாகும்; ஆறாம் வகுப்பு பயிலவிருக்கும் தனது இரண்டு குழந்தைகளுக்கு இந்தி அல்லது எந்த இந்திய மொழியும் தெரியாது என்பது அவருக்குச் சிக்கலாக உள்ளது. சர்வதேசப் பள்ளிகளின் கட்டணம் அதிகமாக இருப்பதால், அவர்களைக் சாதாரணப் பள்ளிகளில் சேர்த்தால் மொழிப் பிரச்சனையால் அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள் என்று அவர் தயங்குகிறார்.

இந்தியாவில் வேலையின்றி ஆறு கோடி ரூபாய் கையிருப்பில் வைத்துக்கொண்டு குடும்பத்தைத் தம்மால் நடத்த முடியுமா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். இந்தச் சூழலில், ஐந்து மாத கால அவகாசத்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து வேலையைத் தேடுவதா அல்லது இப்போதே இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதா எனப் பலரிடம் அவர் ஆலோசனை கேட்டு வருகிறார்.