கேரள மாநிலம் கொச்சியின் வடுதலா பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வாடகை வீட்டில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்பப் பிரச்சனையே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலியானவர்கள் அஸ்வதி நாயர் (36), அவரது தாய் ஸ்ரீகுமாரி (58) மற்றும் அஸ்வதியின் 14, 4, 2 வயதுடைய மூன்று குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், அஸ்வதி மற்றும் ஸ்ரீகுமாரி ஆகிய இருவரையும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுத்தனர்.

குழந்தைகள் மூவரும் படுக்கையில் சடலங்களாகக் கிடந்தனர். குறிப்பாக, சிறிய குழந்தைகள் இருவரும் போர்வையால் போர்த்தப்பட்டு, புத்தாடைகள் மற்றும் கண்ணாடிகள் (Sunglasses) அணிவிக்கப்பட்ட நிலையில் இருந்தது போலீஸாரையே அதிர வைத்துள்ளது. அஸ்வதியும் முறையான சேலை அணிந்து அலங்கரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு தற்கொலை கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், அஸ்வதியின் கணவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுப்பழக்கம் மற்றும் குடும்பப் பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டதைக் குறிப்பிட்டுள்ளார். கணவரின் மரணத்திற்கு அஸ்வதிதான் காரணம் என அவரது புகுந்த வீட்டார் தொடர்ந்து பழி சுமத்தி வந்ததால், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விசாரணையில், அஸ்வதி தனது தற்கொலை முடிவை ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். தனது சொத்துக்கள் அனைத்தையும் ‘பிராவிடன்ஸ் ஹோம்’ என்ற நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும் என அவர் உயில் எழுதி வைத்துள்ளார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இந்தக் குடும்பம், மூத்த குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கொச்சிக்குக் குடிபெயர்ந்துள்ளது.

மேலும் குழந்தைகளைக் கொன்றுவிட்டுப் பெரியவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். வீட்டில் இருந்த சில மருந்துகளையும் போலீஸார் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.