சீனாவில் வேலை இழந்து பசியால் வாடிய இளைஞர் ஒருவருக்கு, உணவக உரிமையாளர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான உதவி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜியாங்சு மாகாணம், வூஷி நகரைச் சேர்ந்த வான் என்ற இளைஞர், தன் வேலையை இழந்ததால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, ஒரு வேளை உணவோடு நாட்களை நகர்த்தி வந்துள்ளார். இந்நிலையில், ஒரு நாள் ஆன்லைன் மூலம் வெறும் 12.8 யுவான் (சுமார் ₹150) மதிப்பில் வறுத்த சாதம் (Fried Rice) ஆர்டர் செய்த அவர், “எனக்கு வேலை போய்விட்டது, சம்பளமும் வரவில்லை; தயவுசெய்து கொஞ்சம் கூடுதல் சாதம் அனுப்புங்கள்” என்று உணவகத்திற்கு உருக்கமான செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.
அவரது செய்தியைக் கண்டு நெகிழ்ந்த உணவக உரிமையாளர் டான், பசியைப் போக்க கூடுதல் உணவை அனுப்பியது மட்டுமின்றி, அந்த உணவுப் பெட்டியின் மீது, “என் உணவகத்திலேயே வந்து உதவியாளராகச் சேர்ந்து கொள்” என்று கைப்பட எழுதி வேலை வாய்ப்பையும் வழங்கினார். தனக்குக் கிடைத்த இந்த இன்ப அதிர்ச்சியை வான் சமூக வலைத்தளங்களில் பகிர, அந்த வீடியோ 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலானது. “ஒரு வேளை உணவு ஒரு நாள் பசியைத் தீர்க்கும், ஆனால் வேலை வாய்ப்பு ஒருவரின் வாழ்க்கையையே மாற்றும்” என்று நெட்டிசன்கள் பலரும் அந்த உணவக உரிமையாளரின் மனிதாபிமானத்தைப் பாராட்டி வருகின்றனர்.
