கர்நாடக மாநிலம் துமகுருவில் உள்ள அரசுப் பள்ளியில், பிப்ரவரி 11 அன்று மதிய உணவிற்காக வரிசையில் காத்திருந்த முதலாம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியின் இரும்புக்கதவு மோதியதில் அந்தச் சிறுமியின் இரண்டு விரல்கள் துண்டாகி விழுந்துள்ளன. ரத்தம் சொட்டச் சொட்ட அந்தச் சிறுமி துடித்தபோதும், அங்கிருந்த ஆசிரியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அதைவிடக் கொடூரமாக, துண்டாகி விழுந்த விரல்களைச் சேகரித்துப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அங்கிருந்த குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளனர்.
மற்ற மாணவர்கள் ரத்தத்தைப் பார்த்து பயப்படுவார்கள் என்ற காரணத்தைச் சொல்லி, அந்த பிஞ்சு விரல்களை ஆசிரியர்கள் குப்பையில் வீசியது மனிதநேயமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது. கட்டுமானத் தொழிலாளர்களான சிறுமியின் பெற்றோருக்குத் தாமதமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதால், சிகிச்சைக்கான பொன்னான நேரம் வீணானது. பதறியடித்துக்கொண்டு பெற்றோர் சிறுமியை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அந்த விரல்களை உடனடியாகக் கொண்டு வந்திருந்தால் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் பள்ளிக்குச் சென்று விரல்களைத் தேடியபோது, ஆசிரியர்களின் அலட்சியமான பதில் பெற்றோரை நிலைகுலையச் செய்துள்ளது. மேலும், இந்தப் புகாரை மறைக்கச் சிறுமியின் பெற்றோர் கணக்கிற்கு 2,000 ரூபாய் பணம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
