மத்திய அரசு தேசிய விரைவுச் சாலைகளுக்கான (Expressways) சுங்கச்சாவடி விதிகளில் அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இனிமேல் ஒரு விரைவுச் சாலை முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை என்றால், வாகன ஓட்டிகளிடம் முழுப் பயணத்திற்கான கட்டணத்தை வசூலிக்க முடியாது. சாலை எவ்வளவு தூரம் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கிறதோ, அந்த தூரத்திற்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என 2008-ஆம் ஆண்டு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருகிறது.
சாதாரணமாகத் தேசிய நெடுஞ்சாலைகளை விட விரைவுச் சாலைகளில் 25% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதுவரை சாலைப் பணிகள் பாதியில் இருந்தாலும் முழு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது பயணிகளுக்குப் பெரும் சுமையாக இருந்தது. இனி இந்த மாற்றத்தால் தனியார் வாகன ஓட்டிகள், லாரி மற்றும் பேருந்து உரிமையாளர்கள் தேவையற்ற கூடுதல் செலவில் இருந்து தப்பிக்கலாம். இது பழைய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, மக்கள் புதிய விரைவுச் சாலைகளை அதிக அளவில் பயன்படுத்தவும் வழிவகுக்கும்.
