பெங்களூருவின் வாடகை உயர்வு ஏற்கனவே மக்களைக் கலங்க வைத்து வரும் நிலையில், தற்போது ஒரு பெண் பகிர்ந்துள்ள தகவல் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. அனு என்ற பெண் தனது எக்ஸ் (X) தளத்தில், பெங்களூருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்கச் சென்றபோது, அதற்கு மாத வாடகையாக ₹80,000 கேட்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு அதிக வாடகைக்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, அந்த வீட்டிற்குள் “சூரிய ஒளி” (Sunlight) நன்றாக வரும் என்பதுதான் அந்த ‘பிரீமியம்’ வசதியாம்! இயற்கை வெளிச்சம் வருவதற்கே இவ்வளவு பெரிய தொகையா என அவர் அதிர்ச்சியில் பதிவிட்ட அந்த போஸ்ட், இப்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

​இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பெங்களூரு வீட்டு உரிமையாளர்களைச் செம்மையாக வதறி வருகின்றனர். “₹80,000 வாடகை கட்டுவதற்குப் பதில், பேசாமல் இஎம்ஐ (EMI) கட்டி ஒரு வீட்டையே வாங்கிவிடலாம்” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். இன்னும் சிலரோ, “சூரிய ஒளியெல்லாம் இப்போது பெங்களூருவில் ஆடம்பர வசதி ஆகிவிட்டதா?” என்றும், “இது பெங்களூருவா இல்லை மும்பையா?” என்றும் கிண்டலாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அடிப்படை வசதிகளுக்கே லட்சக்கணக்கில் விலை பேசும் பெங்களூருவின் வாடகை சந்தை, நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.