தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, 7-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்று அவர் தொண்டர்களிடையே உற்சாகமாகப் பேசினார்.

தமிழகத்தின் நிரந்தர அடையாளமாகத் திகழும் “திராவிட மாடல்” அரசு, டெல்லி பாஜகவின் ஆதிக்கத்திற்கு ஒருபோதும் தலைகுனியாது என்றும், இது தமிழ்நாட்டு உரிமைக்கான போர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தற்போது பாஜகவின் ஒரு கிளை அமைப்பாக மாறிவிட்டதாகவும், தமிழக உரிமைகளை அடகு வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

“தமிழ்நாட்டு அணியா? அல்லது டெல்லி அணியா?” எனத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில், வேட்பாளர் யாராக இருந்தாலும் கூட்டணி தர்மத்திற்காக அனைவரும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வரும் தேர்தல் வெற்றி என்பது பல ஆண்டுகளுக்குப் பேசப்படும் ஒரு வரலாற்றுச் சாதனையாக இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அவர் இலக்கு நிர்ணயித்தார்.