மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நலசோபரா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் ஒரு குடும்பத்தையும் போலீசையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 32 வயதான விஜய் சவுகான், கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். ஜான்பூரைச் சேர்ந்த இவர், கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு ஹவுஜ் கிராமத்தைச் சேர்ந்த சாமன் தேவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறார். முதலில் சந்தோஷமாக இருந்த வாழ்க்கையில்,  கள்ளக்காதலால் கணவனை கொலை செய்யும் அளவுக்கு மனைவி துணிந்து விட்டார்.

சாமன் தேவியின் வாழ்க்கையில் பீகாரைச் சேர்ந்த மோனு என்ற 20 வயது இளைஞர் நுழைந்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே காதல் தொடங்கியது. இது ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாமல் இருந்தாலும், விஜய் சவுகான் சந்தேகித்து கண்காணிக்கத் தொடங்கினார். பலமுறை தொலைபேசியில் பல மணி நேரம் பேசுவதைப் பார்த்ததும், சந்தேகம் உறுதியானதும், அவர்களுக்குள் வாக்குவாதம் பெருகத் தொடங்கியது. தன் உறவை முடிக்க முடியாது என உறுதியாக இருந்த சாமன், கணவரை கொல்ல திட்டமிட்டார்.

சாமன் மற்றும் மோனு இணைந்து, வீட்டிலேயே விஜயை கொலை செய்து, அறைக்குள் குழி தோண்டி அவரது உடலை புதைத்தனர். அதற்குப் பிறகு, அந்த இடத்தில் படுக்கையை வைத்து, குற்றவாளி சாமன் அமைதியாக தங்கியிருந்தார். 20 நாட்கள் வரை, இவர் வீட்டில் இருந்தபோதும், விஜய் எங்கே சென்றார் என்பதை குறித்து உறவினர்கள் கேட்டபோது, “வேலைக்காக வெளியே சென்றுள்ளார், பிஸியாக இருக்கிறார்” எனத் தவறான தகவல் கூறி வந்தார். ஆனால் தொடர்ந்து மூன்று வாரங்களாக விஜய் எவருடனும் தொடர்பு கொள்ளாததும், அவரது தொலைபேசியும் அணைத்து இருந்ததும், குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவரது தந்தை துத்நாத் சவுகான் மற்றும் குடும்பத்தினர் நேரில் மும்பை வந்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்தபோது, தரையில் புதிதாக கட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியில், குழி தோண்டப்பட்டு அதில் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தற்போது சாமன் மற்றும் மோனுவை கைது செய்வதற்காக போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொடூரமான சம்பவம், சமூகத்தில் மிகுந்த அதிர்வையும் வலி நிறைந்த கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது. “தனது கணவரை கொலை செய்த மனைவிக்கும், அவரது காதலனுக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். என் மகனுக்கு நம்பிக்கையோடு திருமணம் செய்தேன், இப்படி ஒரு முடிவு ஏற்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்று விஜய்யின் தந்தை கூறியுள்ளார். மனைவி மற்றும் காதலனின் திட்டமிடப்பட்ட கொலைவழக்கை பற்றி முழு உண்மையும் விரைவில் வெளிவரும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.