தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடனான முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் இடங்களை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதாகத் தெரிகிறது.

திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல் நாளான பிப். 22 அன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளைக் கோரிய நிலையில், திமுக 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், மதிமுக தரப்பில் கடந்த முறையை விட அதிகமாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளும், கூடுதலாக ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடமும் கோரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், காங்கிரஸ் கட்சிக்கு 45 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 தேர்தலில் திமுக தோல்வியடைந்த 40 தொகுதிகளில், சுமார் 20 இடங்களை தங்களுக்கு ஒதுக்கினால் அங்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக காங்கிரஸ் தரப்பு வாதிடுகிறது. 2016-ல் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ், 2021-ல் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்ததைச் சுட்டிக்காட்டி இந்த கூடுதல் இடங்களைக் கோருகிறது.

காங்கிரஸ் 45 இடங்களைக் கோரினாலும், திமுக தலைமை 25 முதல் 28 இடங்களுக்கு மேல் ஒதுக்கத் தயக்கம் காட்டி வருகிறது. வரும் தேர்தலில் திமுக தனித்துப் பெரும்பான்மை பெறும் வகையில் 165 முதல் 170 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுக்க திமுக முன்வரவில்லை.

முதற்கட்டப் பேச்சுவார்த்தையிலேயே காங்கிரஸ் மற்றும் திமுக இடையே இடங்களின் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இருப்பதால், அடுத்தடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் தான் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.