விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெருவைச் சேர்ந்த 50 வயது அக்பர் அலி என்பவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மாமியார் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்பர் அலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அவர், மனைவி செய்யது அலி பாத்திமா, மகள் பர்வீன், மகன் பாருக் மற்றும் மாமியார் சிக்கந்தர் பீவி ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அக்பர் அலி மீதும் தீப்பற்றியது. பலத்த காயமடைந்த ஐந்து பேரும் தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், செய்யது அலி பாத்திமாவின் முதல் கணவர் விபத்தில் இறந்த பிறகு அவர் அக்பர் அலியைத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த தகராறில் மனைவியைச் சுத்தியலால் தாக்கிய வழக்கில் சிறைக்குச் சென்ற அக்பர் அலி, தற்போதுதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

சிறையிலிருந்து வந்த பிறகும் ஆத்திரம் குறையாத அவர், மீண்டும் தகராறில் ஈடுபட்டு இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துச் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய குடும்பப் பிரச்சினை ஐந்து பேரின் உயிருக்கு உலை வைக்கும் நிலைக்குச் சென்றது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.