இன்ஸ்டாகிராம் ‘லைக்ஸ்’ மற்றும் ‘ஃபாலோவர்ஸ்’ போதைக்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்குச் சாட்சியாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரின் வீடியோ தற்போது இணையதளங்களை அதிர வைத்து வருகிறது. ‘நெல்லை சுந்தர்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், தனக்கு ஒரு லட்சம் ஃபாலோவர்ஸ் வந்துவிட்டால், மிக உயரமான காற்றாலையில் (Windmill) இருந்து கீழே உள்ள கிணற்றுக்குள் குதிக்கப்போவதாக அந்த இளைஞர் சவால் விடுகிறார். உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தான இந்தச் செயலை ஒரு விளையாட்டாகப் பேசி வீடியோ வெளியிட்டிருப்பது பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. வெறும் புகழுக்காகவும், சமூக வலைதள அங்கீகாரத்திற்காகவும் ஒரு இளைஞன் தன் உயிரையே பணையம் வைக்கும் துணிச்சல், தற்கால இளைஞர்களின் மனநிலை எந்தத் திசையில் செல்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காணொளி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், பலரும் அந்த இளைஞரின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “ஃபாலோவர்ஸுக்காக உயிரை விடுவதா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் வேளையில், இது போன்ற ஆபத்தான சவால்கள் மற்ற இளைஞர்களையும் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். காவல்துறையினர் மற்றும் சைபர் கிரைம் பிரிவினர் இது போன்ற விபரீத வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. வைரலாவதற்காக உயிரோடு விளையாடும் இந்த ‘நெல்லை சுந்தர்’ வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை வெடிக்கச் செய்துள்ளது.
