ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் கைநிறைய சம்பளம் வாங்கிய போதிலும், கையில் ஒரு ரூபாய் கூட சேமிப்பு இல்லாமல் தவிக்கும் 30 வயது ஐடி (IT) ஊழியர் ஒருவர், தனது எதிர்காலத்திற்காக எப்படிப் பணத்தைச் சேமிப்பது என்று தெரியாமல் இணையதளத்தில் உதவி கேட்டுள்ள உருக்கமான கதை தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஏழைக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அவர், தனது குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரே ஒரு ஆளாக (Sole breadwinner) இருந்து வருகிறார். சமீபத்தில் தனது குடும்பத்தின் சொந்த வீட்டைப் புதுப்பிப்பதற்காக, தான் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த சுமார் 14 லட்சம் ரூபாய் பணத்தை வாரி இறைத்துள்ளார்.
கடன் எதுவும் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து, தனது மொத்த சேமிப்பையும் அந்த வீட்டுக்காகச் செலவழித்ததால், தற்போது 30 வயதில் கையில் பூஜ்ஜியம் சேமிப்புடன் அவர் தவித்து வருகிறார்.
எந்தவொரு கடனோ அல்லது இஎம்ஐ (EMI) தொல்லையோ தன்னிடம் இல்லை என்றாலும், தற்போதைய நிலையற்ற வேலைச் சந்தையில் வெறும் வேலையை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்பதால், இன்சூரன்ஸ், பாலிசி என எதுவுமே இல்லாத தான், இனிமேல் எப்படிப் பூஜ்ஜியத்தில் இருந்து தனது பொருளாதாரத்தை உயர்த்துவது என்று தெரியாமல் ரெடிட் (Reddit) பக்கத்தில் குமுறியுள்ளார்.
இவருடைய இந்த நிலையைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், குடும்பத்துக்காகச் சுயநலமில்லாமல் உழைத்த அவரைப் பாராட்டி, பணத்தைச் சேமிப்பதற்கானப் பல்வேறு ஆலோசனைகளையும், உத்வேகமான கருத்துகளையும் வழங்கி இவரைத் தேற்றி வருகின்றனர்.
