பெங்களூருவில் உள்ள ‘தியோ கஃபே’ (Theo Cafe) செய்துள்ள ஒரு விசித்திரமான காரியம் தற்போது சமூக வலைதளங்களில் ‘டேலைட் ராபரி’ (Daylight Robbery) என வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. அந்த உணவகத்திற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட பில்லில், உணவின் விலையோடு சேர்த்து கூடுதலாக 5% “Extra Gas Crisis Charge” (எரிவாயு தட்டுப்பாடு கட்டணம்) வசூலிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்களால் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதைச் சாக்காக வைத்து, இந்த நூதனக் கொள்ளையில் அந்த உணவகம் இறங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.

​இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், அந்த வாடிக்கையாளர் ஆர்டர் செய்தது ஒரு ‘மின்ட் லெமனேட்’ (Mint Lemonade). அடுப்பங்கரையே தேவையில்லாத, கேஸ் பயன்படுத்தாத ஒரு குளிர்பானத்திற்கும் “கேஸ் தட்டுப்பாடு கட்டணம்” போட்டிருப்பதுதான் நெட்டிசன்களின் கோபத்தை உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. “ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு விலையா?”, “இனி மூச்சு விடுவதற்கும் வரி கேட்பார்கள் போல!” என இணையவாசிகள் அந்த ஹோட்டலை கிழித்தெறிந்து வருகின்றனர். ஏற்கனவே ஜிஎஸ்டி மற்றும் சர்வீஸ் சார்ஜ் எனப் பிழிந்தெடுக்கும் உணவகங்களுக்கு மத்தியில், இது போன்ற சட்டவிரோதக் கூடுதல் கட்டணங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.