காஞ்சிபுரம் மாவட்டம் ஜே.ஜே. நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றிற்குள் தமிழக வெற்றிக் கழகத்தினர் அத்துமீறி நுழைந்து, அங்கு படிக்கும் மாணவர்களைத் தங்களது சொந்த அரசியல் பணிகளுக்காகப் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் புகுந்த தவெகவினர், மாணவர்களைக் கொண்டு தங்களது கட்சியின் கொடிகளைக் கட்ட வைத்ததோடு, குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி கேக் வெட்ட வைத்து, தவெக-விற்கு ஆதரவாக ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாகத் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் கடுமையான கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “படிக்கும் குழந்தைகளைத் தங்களது சொந்தப் பணியாட்கள் போல நடத்துவதற்கு உங்களுக்கும் உங்கள் கட்சியினருக்கும் எப்படி மனது வந்தது? அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன உங்களுடைய அடிமைகளா?” என்று தவெக தலைவர் விஜய்யை நோக்கி நேரடியாகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏழை எளிய மக்களுக்கு நல்ல பள்ளிக்கூடமும், தரமான கல்வியும் வழங்குவதை விடுத்து, அரசுப் பள்ளியை நாடக மேடையாக மாற்றி சிறுபிள்ளைத்தனமாக ஷூட்டிங் நடத்துவது நியாயமா என்று நயினார் நாகேந்திரன் தனது பதிவில் சாடியுள்ளார். தீயசக்தியான முந்தைய திமுகவினர் அரசுப் பள்ளிகளில் நாடக முகாம்கள் நடத்தி பிள்ளைகளின் கல்வியைச் சீரழித்த நிலையில், தற்போதைய தூயசக்தி தவெகவினர் அதைவிட மோசமாகச் செயல்படுவதாகவும், குழந்தைகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதை பா.ஜ.க ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனவே, காஞ்சிபுரம் பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களின் கல்வியிலும் பாதுகாப்பிலும் விளையாடிய தவெகவினர் மீது பள்ளிக் கல்வித் துறையும், தமிழக அரசும் உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.