சென்னையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் தமிழகத்தில் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தற்போது குழந்தை முதல் முதியவர் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருவதாகவும், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் பட்டியலிட்டு சாடினார். குறிப்பாக, பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்திலேயே மது அருந்தும் காட்சிகள் வெளியாவது மனதிற்கு மிகுந்த வேதனையைத் தருவதாக அவர் தெரிவித்தார்.

​மேலும், தமிழகத்தில் கிட்னி திருட்டு மற்றும் மணல் கொள்ளை போன்ற சட்டவிரோதச் செயல்கள் தங்குதடையின்றி நடைபெற்று வருவதாகவும், இவற்றைத் தடுக்க திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இபிஎஸ் சாடினார். தமிழக மக்களின் நலனைப் புறக்கணித்துவிட்டு, வெறும் கொள்ளையடிப்பதை மட்டுமே திமுக அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் ஆவேசமாகப் பேசினார். சென்னையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டு திமுக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.