நீரிழிவு நோயாளிகள் உணவில் இருக்கும் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் பழங்களையும் தவிர்க்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் அனைத்து பழங்களும் ரத்தச் சர்க்கரையில் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அந்த வகையில், ஸ்ட்ராபெர்ரி குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டும், நார்ச்சத்தும் கொண்ட பழமாக இருப்பதால் உணவில் அளவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய தேர்வாக இருக்கிறது.
ஸ்ட்ராபெர்ரியில் நார்ச்சத்துடன் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் உள்ளன. ஒரு கப் அளவுக்கு மேல் ஸ்ட்ராபெர்ரியில் சுமார் 15 கிராம் கார்போஹைட்ரேட்டும், 3 கிராமுக்கும் அதிகமான நார்ச்சத்தும் இருப்பதாக அமெரிக்க நீரிழிவு சங்கம் தெரிவிக்கிறது. நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குவதால், உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலில் உறிஞ்சப்படும் வேகத்தையும் பாதிக்கலாம்.
ஆனால், “ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அதிகரிக்காது” என்று பொருள் கொள்ளக்கூடாது. பழங்களில் இயற்கையான சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் உள்ளன. எனவே, சாப்பிடும் அளவு முக்கியம். ஸ்ட்ராபெர்ரியை அப்படியே சாப்பிடுவது நல்லது; அதனுடன் சர்க்கரை, இனிப்பு சிரப் போன்றவற்றைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். நட்ஸ் அல்லது சர்க்கரை சேர்க்காத தயிர் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவதும் ஒரு வழியாக இருக்கலாம்.
மேலும், ஒவ்வொருவரின் உடலும் உணவுக்கு ஒரே மாதிரியாகப் பதிலளிக்காது. சாப்பிடும் அளவு, உடன் எடுத்துக்கொள்ளும் உணவு, ஏற்கெனவே இருக்கும் ரத்தச் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவுத் திட்டத்திற்கு ஏற்ப பழங்களைத் தேர்வு செய்வதும், தேவையான அளவைப் பின்பற்றுவதும் முக்கியம்.
