கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காளியாபுரம் பகுதியில், குடும்பத் தகராறு கொடூரக் கொலையாக முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிராம் (52) மற்றும் அவரது தம்பி செந்தில் திருமூர்த்தி (45) ஆகிய இருவரும் தேங்காய் பறிக்கும் தொழிலாளர்கள் ஆவர். ரகுபதிராமின் மனைவி வெண்ணிலா (48), அருகிலுள்ள பகுதிகளில் சமையல் வேலைக்கு செல்கிறார். ஆனால், அவர் வேலைக்கு செல்வது குறித்து கணவன் ரகுபதிராமுக்கு விருப்பம் இல்லாததால், இதை மையமாகக் கொண்டு கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
“வேலைக்கு தொடர்ந்து சென்றால் விஷம் குடித்து இறந்து விடுவேன்” என மனைவியியை மிரட்டியுள்ள ரகுபதிராம், கடந்த மாலை வெண்ணிலா வேலைக்கு சென்று விட்டதைத் தொடர்ந்து, அவரை செல்போனில் தொடர்புகொண்டு, தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட வெண்ணிலா உடனடியாக உறவினர்களுக்கும், அவரது தம்பி செந்திலுக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து, ரகுபதிராமை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து, கடுமையாகத் தடுக்க முயன்றார்.
இதையடுத்து, ரகுபதிராமுக்கும் செந்திலுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து, கைகலப்பாக மாறியது. அதே நேரத்தில், ஆத்திரம் அடைந்த ரகுபதிராம், தேங்காய் வெட்டும் அரிவாளால் தம்பி செந்திலை கழுத்தில் வெட்டினார். இதில் செந்தில் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் தவித்தார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி செந்தில் உயிரிழந்தார்.
இதே நேரத்தில், விஷம் குடித்திருந்த ரகுபதிராமும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரகுபதிராம் மீதான கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், குணமடைந்ததும் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
