மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கருத்து, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை கடுமையாக பாதித்துள்ளது.

வருகிற செப்டம்பர் 11ம் தேதி, சுதந்திர போராட்ட வீரரும் சமூக சீர்திருத்த பணியில் ஈடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு நாள் நடைபெற உள்ளது. இந்நிலையில், அவர் குறித்து பழனிசாமி வெளியிட்ட கருத்து எதிர்ப்பு கிளப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் சக்கரவர்த்தி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், “மதுரை விமான நிலையம் குறித்த எடப்பாடியின் கருத்து, தேவேந்திர குல வேளாளர் மக்களின் எண்ணத்துக்கு எதிரானது. 60 ஆண்டுகளாக நடைபெறும் குருபூஜைக்கு இதுவரை அதிமுக தலைமை ஒருவரும் வந்ததில்லை. தற்போதைய கருத்துகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.

எனவே, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நினைவிடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகுமானால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பரமக்குடி பகுதிகளில் ‘அதிமுகவினரை அனுமதிக்கமாட்டோம்’ என எழுதி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.