இன்றைய கார்ப்பரேட் உலகத்தில் மருத்துவமனை பில்கள் ஆயிரக்கணக்கில் எகிறி மருத்துவரே கடவுள் என்ற பழமொழி பலருக்கும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. மருத்துவத் துறை ஒரு பெரிய தொழிலாக மாறிவிட்ட இந்தச் சூழலில், கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் 5 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை எளிய மக்களின் நோயைத் தீர்த்து வருகிறார் மூத்த பொதுநல மருத்துவரான டாக்டர் சங்கர் கவுடா. மருத்துவப் படிப்பை முடித்தவுடன் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நல்ல சம்பளத்துடன் பணிபுரியும் வாய்ப்புகள் வந்தபோதிலும், கிராமப்புற மற்றும் ஏழை மக்கள் எளிய சிகிச்சைக்காக படும் அவதியைத் தன் கண்ணால் கண்ட இவர், மக்கள் சேவையே முக்கியம் என முடிவெடுத்தார். கால மாற்றத்தால் மற்ற மருத்துவமனைகளின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்தாலும், இவரது கிளினிக்கில் 5 ரூபாய் கட்டணம் மட்டும் மாறவே இல்லை. இதனால் தினந்தோறும் இவரது கிளினிக் முன்பு தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பட்ட ஏழை நோயாளிகளின் நீண்ட வரிசையைக் காண முடிகிறது.
“இலவசமாக சிகிச்சை அளித்தால் நோயாளிகளுக்கு அதன் மீது மரியாதை இல்லாமல் போய்விடும். அதோடு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்; அவர்களின் சுயமரியாதைக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த 5 ரூபாயை வாங்குகிறேன்” என்று டாக்டர் சங்கர் கவுடா நெகிழ்ச்சியோடு கூறுகிறார். நோயாளிகளைத் தன் குடும்ப உறுப்பினர்களைப் போலக் கருதி சிகிச்சை அளிப்பதுடன், ஏழை நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளையும் இலவசமாக வழங்கி வருகிறார். வாழ்வதற்குப் பேராசைப்பட்டு கோடிக்கணக்கில் சொத்து சேர்க்கத் தேவையில்லை, நாலு பேரின் நல்வாழ்த்துகளும் நிம்மதியான வாழ்வுமே போதும் என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியிருக்கும் இவரைப் போன்ற மருத்துவர்கள் இன்றைய இளம் மருத்துவ மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் ஒரு மிகப்பெரிய வழிகாட்டியாவார்கள். 42 வருடங்களாக ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து வரும் இவருக்கு நமது ராயல் சல்யூட்.
