சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களை சிரிக்க வைப்பதுடன் ஆச்சரியப்படவும் வைக்கும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில் நீண்ட கம்பு ஒன்றுடன் நின்றுகொண்டிருக்கிறார். அப்போது, அவரது வீட்டின் எதிரே உள்ள மற்றொரு மொட்டை மாடியில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று, அந்தப் பெண்ணை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு, அவரை அச்சுறுத்தும் நோக்கில் ஆக்ரோஷமாக முன்னோக்கிப் பாய்கிறது. பொதுவாக குரங்குகள் மிரட்டினால் மனிதர்கள் பயந்து ஓடுவதுதான் வழக்கம். ஆனால், இந்த வீடியோவில் அந்தப் பெண் துளியும் பயப்படாமல், கையில் இருந்த கம்பை சுழற்றிக்கொண்டு முழு தைரியத்துடன் அந்த குரங்கை நோக்கி நேருக்கு நேராகப் பாய்கிறார்.

பெண்ணின் இந்த எதிர்பாராத அதிரடி ஆக்ரோஷத்தைக் கண்டவுடன், மிரட்ட வந்த குரங்கின் தைரியம் அடுத்த நொடியே காற்றில் பறந்தது. சில வினாடிகள் அங்கேயே ஸ்தம்பித்து நின்ற அந்த குரங்கு, ஆபத்தை உணர்ந்து சட்டென்று வாலைச் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. எக்ஸ் (X) தளத்தில் ‘@Vairagya_Shanti’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த 13 வினாடி வீடியோவை தற்போது லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “நாமெல்லாம் தெருவில் நாய் பார்த்தாலே பயந்து வழி மாறிப் போவோம், ஆனால் இந்த பெண் குரங்கையே அலறவிட்டுள்ளார்”, “அந்த குரங்கு இன்று தவறான பெண்ணிடம் வம்பு வைத்துவிட்டது”, “தைரியம்னா என்னனு இன்னைக்கு அந்த குரங்குக்கு நல்லா புரிஞ்சிருக்கும்” எனப் பலவாறாகக் கமெண்ட் செய்து அந்தப் பெண்ணின் அசாத்திய தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர்.