மத்திய நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள நிலத்தடி நீர் ஆதாரங்கள் முன்பை விட மிகக் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன. ஆண்டுதோறும் நிலத்தடி நீர் மறுஊட்டம் ஓரளவுக்கு மேம்பட்டிருந்தாலும், இந்தியாவில் உள்ள சுமார் 25 சதவீத பகுதிகளில் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு, மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது.
இது குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர் பயன்பாடு அதன் ரீசார்ஜ் அளவை விட 100% க்கும் அதிகமாக உள்ளது. மாறிவரும் பருவநிலை மற்றும் போதிய நீர் மேலாண்மை இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் நிதி ஆயோக் போன்ற அரசு அமைப்புகளின் எச்சரிக்கை தரவுகளின்படி, வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த நீர் தேவையானது, தற்போது கிடைக்கும் விநியோகத்தை விட இருமடங்காக அதிகரிக்கக்கூடும்.
மேலும் டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 முக்கிய நகரங்கள் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டு போகும் நிலையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன. இதனால் சுமார் 60 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரமும், லட்சக்கணக்கான உயிர்களும் குடிநீர் பற்றாக்குறையினால் பெரும் ஆபத்தில் இருப்பதாக இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் எச்சரிக்கின்றன.
