கிரிக்கெட் மைதானங்களில் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான வீரர்களைச் சந்திக்கப் பாதுகாப்பு வளையங்களை மீறி உள்ளே நுழைவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

அதேபோல் ஆப்கானிஸ்தான் உள்நாட்டு லீக் தொடரில், ‘பான்ட்-இ-அமீர் டிராகன்ஸ்’ மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் தலைமையிலான ‘மிஸ் ஐனக் நைட்ஸ்’ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போதும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்போது மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர், அங்கிருந்த கிரிக்கெட் வீரரின் பொருளைப் பறித்துச் சென்றுள்ளார்.

“>

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டிராகன்ஸ் அணி 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், குர்பாஸ் தலைமையிலான நைட்ஸ் அணி 10-வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற செயல்களால் சம்பந்தப்பட்ட மைதானத்தின் நற்பெயர் கெடுவதோடு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மைதானங்களுக்குக் குறைபாட்டுப் புள்ளிகளை வழங்கும். ஒரே மைதானத்தில் தொடர்ந்து மூன்று முறை இது போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டால், அந்த மைதானத்திற்குத் தற்காலிகத் தடையும் விதிக்கப்படலாம்.

அதோடு கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் போது மைதானத்திற்குள் நுழைந்த இந்தியச் சிறுவன் ஒருவனுக்கு சுமார் 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இது ஒரு உள்நாட்டு லீக் போட்டி என்பதால், இந்த குறிப்பிட்ட ரசிகர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.