இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச அறிமுகத்தை தாமதப்படுத்த வேண்டாம் என்று பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்த நிலையில், 15 வயதான வைபவ் தொடர்ந்து மூன்று போட்டிகளில் பெஞ்சில் அமர்த்தப்பட்டது குறித்து அவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

“சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதிலேயே அறிமுகமானதைப் போல, ஒரு வீரர் திறமையாகவும் தயாராகவும் இருக்கும்போது அவருடைய வயதைக் கணக்கிடக்கூடாது. திறமை இருக்கும்போது அவர்களை விளையாட விட வேண்டும், இல்லையெனில் காலந்தாழ்ந்து போக வாய்ப்புள்ளது,” என்று கபில்தேவ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் வயது வாரியான போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான இளம் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

குறிப்பாக, 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 16 இன்னிங்ஸ்களில் 776 ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

“>

 

இந்தத் தொடரில் 237.30 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டுடன் ஒரு சதம், ஐந்து அரை சதங்கள் மற்றும் சாதனை அளவிலான 72 சிக்ஸர்களை விளாசி, உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார். இத்தகைய அபாரமான திறமையைக் கொண்டுள்ள இளம் வீரரை விரைவில் சர்வதேச களத்தில் இறக்க வேண்டும் என்பதே கபில்தேவின் கருத்தாகும்.