உத்தரப் பிரதேசத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த 44 வயது சுரேந்திர சர்மா என்ற நபர் கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் இருந்ததோடு, கடுமையான மதுப் பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார்.

இதனால் தினமும் தனது 40 வயது மனைவி ரூபி சர்மாவிடம் பணம் கேட்டுத் தகராறு செய்தும், பணம் தராதபோது அவரைத் கொடூரமாக அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். இந்தத் தொல்லையைத் தாங்க முடியாத ரூபி, தனது கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

அதன்படி, கடந்த மே 18 அன்று கணவருக்குப் பிடித்த பாயாசத்தில் அதிக அளவிலான மயக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட சுரேந்திர சர்மா மயக்கமடைந்ததும், அவரை மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

மறுநாள் காலையில் தனது இரண்டு மகள்களையும் யாருக்கும் சந்தேகம் வராதவாறு அவர்களது பெரியப்பா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திய ரூபி, தனது வீட்டுப் பாத்ரூம் தரையைத் தோண்டி, அதற்குள் கணவரின் பிணத்தைப் புதைத்து சிமெண்ட் பூசியுள்ளார்.

மேலும், யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அதன் மேல் புதிய டைல்ஸ் கற்களைப் பதித்துவிட்டு, போலீஸ் நிலையத்திற்குச் சென்று தனது கணவரைக் காணவில்லை என்று நாடகமாடி புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் சுரேந்திர சர்மாவின் தம்பி, தனது அண்ணன் காணாமல் போன பிறகு அவரது ஏடிஎம் கார்டு மூலம் தொடர்ந்து பணம் எடுக்கப்படுவதைக் கவனித்துக் கொண்டு போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீசார் சுரேந்திராவின் வீட்டிற்குச் சென்று சோதனையிட்ட போது, பாத்ரூமில் இருந்த புதிய டைல்ஸ் மீது சந்தேகம் ஏற்பட்டு அதை உடைத்துப் பார்த்துள்ளனர். அப்போது உள்ளே இருந்து சுரேந்திர சர்மாவின் எலும்புக்கூடு மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.