தமிழகத்தில் நடைபெற்று வரும் த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. தரப்பில் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், த.வெ.க. அரசை கவிழ்க்க தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அதிரடி விசாரணை நடத்திய போலீஸார், ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான தியாகராஜன், நரேஷ், ரமேஷ், கார்த்தி, செல்வன், அ.தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் மற்றும் ராஜேஷ் ஆகிய 8 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க மொத்தம் ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்ற அதிர்ச்சி வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீஸார் தற்போது ‘லுக் அவுட் நோட்டீஸ்’ பிறப்பித்துள்ளனர். முன்னதாக, கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்குச் சென்ற சென்னை போலீஸார், வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கினர். இந்த சம்மனை செந்தில் பாலாஜியின் தந்தை பெற்றுக்கொண்டார். த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பாய்ந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, தமிழக அரசியலில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
