தமிழகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க தவெக (தமிழக வெற்றிக் கழகம்) குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, திமுக சார்பில் ஆளுநரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோர் இன்று ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “வேப்பனஹள்ளி மற்றும் நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ-க்களிடம் தவெக தரப்பில் ரூ.50 கோடி வரை கொடுப்பதாகக் கூறி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், “நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினிடம், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தால், அவர்களுக்கு அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி பேரம் பேசப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுமட்டுமின்றி, திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை மூலமாக மிரட்டிய விவகாரம் குறித்தும் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குதிரை பேரப் புகார்கள் மற்றும் மிரட்டல் சம்பவங்கள் குறித்து ஆளுநர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்களிடம் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி மூலமாக திமுக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் தற்போது திமுகவும் தமிழக வெற்றிக் கழகம் மீது குதிரை நேரத்தில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.