இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடி வருகிறது. ஜூலை 1 அன்று நடைபெற்ற முதல் போட்டி மழையினால் முடிவு ஏதுமின்றி ரத்தான நிலையில், இன்று ஜூலை 4 சனிக்கிழமை மேன்செஸ்டரில் இரண்டாவது டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. இப்போட்டியில் 15 வயதே ஆன இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சி அறிமுக வீரராகக் களம் இறங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகிறது.
ஏனெனில், போட்டிக்கு முந்தைய நாள் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், வைபவ் சூர்யவன்சியை விட அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கே தற்போதைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த மூன்று இன்னிங்ஸ்களில் சஞ்சு சாம்சன் பெரிய அளவில் ரன்கள் குவிக்காததால், சமூக வலைதளங்களில் சஞ்சுவின் இடத்திற்கு வைபவை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Vaibhav Suryavanshi was standing alone and waiting for his turn to practice, Sanju Samson saw him and encouraged Vaibhav Suryavanshi.pic.twitter.com/RKcOX3aqn1
— Raghu देश प्रेमी (@Raghubharat2024) July 3, 2026
இத்தகைய சூழ்நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்சி இடையே ஆடும் லெவனில் இடம் பிடிப்பதற்கான போட்டி நிலவினாலும், அது ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதற்குச் சான்றாக, தற்போதைய பயிற்சிப் போட்டியின் போது சஞ்சு சாம்சன் ஒரு சீனியர் வீரராக வைபவை கட்டிப்பிடித்து, அவருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து ஊக்கப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பழைய பந்தத்தைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, கடந்த 2025 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் காயமடைந்த போதுதான் வைபவ் சூர்யவன்சிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, 2026 ஐபிஎல் தொடரில் 200-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்த வைபவ், ஆரஞ்சு கேப் வென்றதோடு தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் இவர்களின் ஆரோக்கியமான நட்பு ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
