இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், டெல்லி மாநில அணியில் தனக்கு இடம் கிடைக்காமல் போனதால், தனது தந்தை எடுத்த அதிரடியான வாழ்க்கை மாற்றும் முடிவு குறித்து ‘ஜியோஸ்டார் சூப்பர்ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் மனம் திறந்துள்ளார். டெல்லி போலீஸ் குவார்ட்டர்ஸில் வளர்ந்த சஞ்சு சாம்சனின் தந்தை, டெல்லி போலீஸ் கால்பந்து அணியின் வீரராக இருந்தவர். காலையும் மாலையும் தனது தந்தை பயிற்சிக்குச் செல்வதைப் பார்த்தே தனக்கு விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது என்று சஞ்சு சாம்சன் நினைவு கூர்ந்துள்ளார்.

தனது தந்தை கால்பந்து பின்னணியைக் கொண்டிருந்தாலும், சஞ்சு சாம்சன் மற்றும் அவரது சகோதரரின் பேட்டிங் திறமையைக் கண்டறிந்து, அவர்களை கிரிக்கெட் விளையாட ஊக்குவித்துள்ளார். சிறுவயதில் டெல்லியின் புகழ்பெற்ற  அருண் ஜெட்லி  மைதானத்தில் தனது தந்தை சிறப்பு அனுமதி பெற்று, தங்களை ஒரு மணி நேரம் பயிற்சி செய்ய வைத்தது ஒரு மறக்க முடியாத ஆசிர்வாதம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

டெல்லி கிரிக்கெட் சங்க ஜாக்கெட்டை அணிந்து கொண்டு சக நண்பர்கள் மாநில அணிக்கு விளையாடுவதைப் பார்த்த சஞ்சு சாம்சனுக்கும், டெல்லி அணிக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியம் உருவானது. இதற்காக டெல்லி மாநில அணித் தேர்வுகள் மற்றும் முகாம்களில் பங்கேற்று சிறப்பாக ரன்களைக் குவித்த போதிலும், அறிவிக்கப்பட்ட இறுதிப் பட்டியலில் சஞ்சு சாம்சனின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அமைதியாக வீடு திரும்பிய கணமே, சஞ்சுவின் தந்தை ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார்.

‘நாம் உடனடியாக கேரளாவுக்கு மாறுகிறோம்’ என்று அவர் சஞ்சுவின் தாயாரிடம் கூற, பிள்ளைகள் இன்னும் 6-ஆம் வகுப்புதான் படிக்கிறார்கள், 10-ஆம் வகுப்பு வரை பொறுப்போம் என்ற தாயாரின் பேச்சை சஞ்சுவின் தந்தை கேட்கவில்லை. உடனடியாக மூன்றே நாட்களில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து, ஒட்டுமொத்த குடும்பத்தையும் கேரளாவுக்கு அழைத்துச் சென்றார். கேரளா சென்ற பிறகு சஞ்சு சாம்சன் அம்மாநில அணிக்காக விளையாடத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து இன்று சர்வதேச அளவில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயரத்தை எட்டியுள்ளார்.