இந்திய டி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான சூர்யகுமார் யாதவ், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், மைதானத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யகுமாரிடம், ‘இந்திய ஜெர்ஸியில் உங்களை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்கிறார்கள்’ என நிருபர்கள் கூறியுள்ளனர்.

இதற்குத் தனது வழக்கமான புன்னகையுடன் ஹிந்தியில் பதிலளித்த சூர்யகுமார், “என்னையா? ஏன், இப்பவும் எல்லாமே நல்லாத்தானே போயிட்டு இருக்கு!”  எனக் கூறி அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தார். அணியில் இடம் கிடைக்காத நிலையிலும் எந்தவொரு விரக்தியும் காட்டாமல், சூர்யகுமார் யாதவ் மிகவும் கூலாகவும், நகைச்சுவையாகவும் அளித்த இந்த ஒற்றை வரிப் பதில் தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனான 35 வயது சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து தொடரிலிருந்து நீக்கப்பட்டது, தற்போதைய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சூர்யகுமாரின் ஃபார்ம் மற்றும் அணியின் எதிர்கால நீண்ட கால திட்டங்களை மனதில் வைத்தே அவரைத் தவிர்த்துவிட்டு, ஸ்ரேயாஸ் ஐயரிடம் டி20 கேப்டன் பொறுப்பை வழங்கியதாக முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் நெருக்கடிக்கு உள்ளாகும் போதெல்லாம், சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். இருப்பினும், எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல், இந்திய அணிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள சூர்யகுமார், தற்போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்த வதந்திகளுக்குத் தனது அசாத்தியமான நகைச்சுவை மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ள ‘SKY ‘, ஏன் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.