திமுகவில் இருந்து விலகிய சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கலைராஜன், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். முன்னதாக அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவர், அக்கட்சியில் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதிமுக மேடைகளில் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பாடும் ‘பூமி உள்ள வரை எங்கம்மா புகழே நிலைத்திருக்கும்’ என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியவரும் இவரே ஆவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், வி.பி. கலைராஜன் முதலில் அமமுகவில் இணைந்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். எனினும், திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த அவர், தற்போது அங்கிருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
