மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தற்போது பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்து வரும் நிலையிலும், புனே மாநகராட்சி ஊழியர்கள் சாலையோர மரங்கள் மற்றும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விநோதச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புனே  பகுதியில் அரங்கேறியுள்ளது. புனே நகரம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து கொண்டிருந்த அந்த சமயத்தில், மாநகராட்சி ஊழியர் ஒருவர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலையோர செடிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், ‘இவ்வளவு பலத்த மழை பெய்யும் போது ஏன் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியதற்கு, ‘தனது மேலதிகாரிகள் கொடுத்த உத்தரவைத்தான் தான் பின்பற்றுவதாக’ அந்த ஊழியர் கூலாகப் பதிலளித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by DCN पुणे (@dcnpunemarathi)

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் வரிப்பணம் இவ்வளவு அலட்சியமாக வீணடிக்கப்படுவதா என்று நெட்டிசன்கள் பலரும் புனே மாநகராட்சியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். புனே மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் ஜூலை 4 வரை மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. மேலும் புனே நகரம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய இடி, மின்னல் மற்றும் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் கடுமையான வறட்சியைச் சந்தித்த புனேவிற்கு, தற்போது பெய்து வரும் இந்த பருவமழை நீர்நிலைகளின் நீர்மட்டத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இயற்கையாகவே செடிகளுக்குப் போதிய தண்ணீர் கிடைக்கும் போது, மாநகராட்சி ஊழியர்கள் செய்த இந்த விநோத வேலை குறித்து புனே மாநகராட்சி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.