நகர வாழ்க்கையின் பரபரப்பைத் தவிர்த்து, அமைதியான சூழலைத் தேடி மலைப்பிரதேசங்களுக்குச் சென்று வாழ வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. அப்படி இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி பகுதியில் வசித்து வரும் ஒரு நபர், ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விரைவாக டெலிவரி செய்யும் பிளின்கிட் செயலியில் ஒரு ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால், மலைப்பகுதி என்பதால் டெலிவரி செய்யும் நபரால் அவரது வீட்டின் வாசலுக்கே வர இயலவில்லை. இதனால், அந்த நபர் தனது ஆர்டரைப் பெற்றுக்கொள்வதற்காக மலையிலிருந்து கீழே சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார். அங்கு வந்த டெலிவரி ஊழியருக்கு முதலில் கை கொடுத்து அன்புடன் வரவேற்று, தனது பார்சலைப் பெற்றுக்கொண்ட காட்சிகளை அவர் வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

“>

இந்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமே இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளதோடு, பயனர்கள் பலரும் இதற்குப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் “எனக்கும் வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்சனைகள் தான் வேண்டும்” என்று சிலர் வேடிக்கையாகக் கூற, மற்றும் சிலரோ மலைப்பகுதிகளிலும் Blinkit சேவை கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். இக்கட்டான மலைப்பாதையிலும் டெலிவரி செய்ய வந்த ஊழியரை அந்த நபர் இன்முகத்தோடு வரவேற்ற அவரது நற்பண்பையும் இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.