பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஏகம் சிங் தில்லான் என்ற தொழிலதிபரின் கொடூரக் கொலை வழக்கில், அவரது மனைவி சீரத் கவுருக்கு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தற்போது ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் 6.3 அடி உயரமுள்ள தனது கணவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சீரத் கவுர், அவரது உடலை வெறும் 2 அடி நீளமுள்ள ஒரு சூட்கேஸில் அடைத்து, தனது பிஎம்டபிள்யூ  காரில் வைத்து அப்புறப்படுத்த முயன்றார். இந்தச் கொடூரச் செயலில் உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்ட சீரத்தின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், சீரத் கவுர் மட்டுமே முதன்மைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரங்கேறிய இக்கொலைச் சம்பவம், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காரில் இருந்து ரத்தம் கசிந்ததை ஒரு ஆட்டோ ஓட்டுநர் கவனித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்ததன் மூலமே வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில் குடும்பத் தகராறு மற்றும் பணப் பற்றாக்குறை காரணமாக கணவனைக் கொலை செய்துவிட்டு, சடலத்தை ஆற்றில் வீசத் திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்தது. ஒன்பது ஆண்டுகள் நீடித்த இந்த நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, கணவரைக் கொலை செய்ததற்கும், அதற்கான சாட்சியங்களை அழிக்க முயன்றதற்கும் சீரத் கவுருக்கு நீதிமன்றம் இந்த வாழ்நாள் சிறைத்தண்டனையை உறுதி செய்துள்ளது.