மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தின் சக்லம்பா பகுதியில், விவசாய நிலத்தில் தங்கப் புதையல் பானை கிடைத்திருப்பதாகக் கூறி, தனியார் வாகன ஓட்டுநர் ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ராஜ்குமார் பாபுராவ் காம்ப்ளே (45) என்ற தனியார் டிரைவருக்கு, கடந்த ஜனவரி 1 அன்று புனேவில் வைத்து மிலிந்த் அர்ஜுன் நிகால்ஜே என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்குப் பிறகு ராஜ்குமாரைத் தொடர்புகொண்ட மிலிந்த், “எனது விவசாய நிலத்தில் தங்க நாணயங்கள் நிறைந்த புதையல் பானை கிடைத்துள்ளது. இதை யாரிடமும் சொல்லிவிடாதே” என்று கூறி ரகசியமாகப் பேசியுள்ளார். மேலும், அந்தப் பானையில் உள்ள 1,000 தங்க நாணயங்களை மிகக் குறைந்த விலைக்குத் தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார்.
டிரைவர் ராஜ்குமாரின் முழு நம்பிக்கையைப் பெறுவதற்காக மிலிந்த் ஒரு தந்திரமான ஸ்கெட்ச் போட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 16 அன்று ராஜ்குமாரை வரவழைத்து, ஒரு தங்க நாணயத்தை மட்டும் ‘சாம்பிள்’ ஆகக் கொடுத்துள்ளார். அதனை ராஜ்குமார் ஒரு நகைக்கடையில் பரிசோதித்தபோது, அது 100% தூய தங்கம் என்பது உறுதியானது. இதனால் மிலிந்தை முழுமையாக நம்பிய ராஜ்குமார், முதற்கட்டமாக போன்பே மூலம் ரூ.12,500 அனுப்பியுள்ளார். பின்னர் முக்கிய வியாபாரத்திற்காக கடந்த மே 19 அன்று மாலேகான் சென்று, மிலிந்திடம் ரூ.5 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொடுத்துவிட்டு 1,000 நாணயங்கள் கொண்ட மூட்டையைப் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தன் ஊருக்குக் கொண்டு வந்து நகைக் கடையில் பரிசோதித்தபோது, அந்த 1,000 நாணயங்களும் போலி என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பணத்தைத் திரும்பக் கேட்க ராஜ்குமார் சென்றபோது, அவரைக் கண்டதும் மிலிந்த் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
