கடந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக த.வெ.க.  நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் நேற்று காலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். எஸ்பி அலுவலகத்தில் 5 மணி நேர விசாரணைக்குப் பிறகு, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ரூ.10 ஆயிரம் பிணைத்தொகையுடன், 10 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சொந்த ஜாமீனில் செல்ல மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த கைது நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அவர் கைது செய்யப்பட்டது முற்றிலும் சரியான நடவடிக்கை என்று வரவேற்றுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ. பேசுகின்ற பேச்சா இது என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினால் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று சாடினார்.

மேலும், தி.மு.க.வினர் தமிழக முதலமைச்சரை மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் மற்ற அரசியல் தலைவர்கள் குறித்தும் அசிங்கமாக எழுதுவதாகவும், அதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும்போது கூட வரம்பு மீறாமல் நாகரிகமான பேச்சு இருக்க வேண்டும் என்றும், அனிதா ராதாகிருஷ்ணன் மீதான இந்த நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.