அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளை ஈரானின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஈரானை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் மோதலின் போது அவரது மகள், மருமகன், மருமகள் மற்றும் 14 மாத பச்சிளம் பேத்தி ஆகியோருடன் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி, ஒருவர் மரணமடைந்த 24 மணி நேரத்திற்குள் உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், கமேனியின் உடல் கடந்த 4 மாதங்களாக ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட மர்மம் தற்போது வெளியாகியுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த மாதம் எட்டப்பட்ட ‘இடைக்கால போர் நிறுத்தம்’ காரணமாகவே, இவ்வளவு நாட்கள் தள்ளிப்போன இறுதிச்சடங்கு நிகழ்வுகளை தற்போது ஈரான் அரசு முறைப்படி ஏற்பாடு செய்துள்ளது.
WATCH: Iran’s Ghalibaf cries during the farewell ceremony of late Supreme Leader Ali Khamenei. pic.twitter.com/3G1i7Fowxl
— Clash Report (@clashreport) July 3, 2026
ஈரான் முழுவதும் நடைபெறவுள்ள தொடர் இறுதி ஊர்வலங்களுக்கு முன்னதாக, மறைந்த உச்ச தலைவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தெஹ்ரானின் கிராண்ட் மொசல்லாவில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த இறுதி அஞ்சலி நிகழ்வின் போது ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி ஆகியோர் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுதனர்.
எனினும், அலி கமேனியின் மரணத்திற்குப் பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவரது மகன் மொஜ்தபா கமேனி, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெஹ்ரானில் சடங்குகள் முடிந்த பின்னர், கமேனியின் உடல் கோம் நகருக்கும், அங்கிருந்து ஈராக்கின் புனித நகரங்களான நஜாஃப் மற்றும் கர்பலாவிற்கும் கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக ஜூலை 9 அன்று மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரெஸாவின் ஆலயத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
