உலகப் புகழ்பெற்ற WWE மல்யுத்த சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா, அட்லாண்டாவில் உள்ள ‘ஆண்டர்சன் சென்டர் ஃபார் ஹேர்’ மையத்தில் தனது இரண்டாவது சுற்று முடி மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் மேற்கொண்ட முதல் முடி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதுதொடர்பான தனது பயணத்தை ஆரம்பத்தில் இருந்தே ஜான் சீனா மிகவும் வெளிப்படையாகப் பேசி வந்தார்.
பல ஆண்டுகளாக WWE போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள், மைதானத்தில் “வழுக்கைத் தலையன் ஜான் சீனா” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி தன்னைத் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததே, தன்னை இந்த முடி மாற்று சிகிச்சையை மேற்கொள்ளத் தூண்டியது என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது முதல் முடி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சிவப்பு ஒளி சிகிச்சை மினாக்ஸிடில் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய ஒரு பிரத்யேக முடி ஆரோக்கியப் பராமரிப்பு முறையை ஜான் சீனா தொடர்ந்து பின்பற்றி வந்ததாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், தனது இரண்டாவது சுற்று முடி மாற்று சிகிச்சை குறித்து தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜான் சீனா, “FUE சிகிச்சையின் இரண்டாம் சுற்றில் மிகச் சிறந்த முடிவுகளுக்காக நான் இதில் முழுமையாக ஈடுபட்டேன்.
இந்தப் பயணத்தில் எனக்குத் துணையாக இருந்த மருத்துவர் கென் ஆண்டர்சன் மற்றும் ஆண்டர்சன் சென்டர் ஃபார் ஹேர் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஜான் சீனாவின் இந்த புதிய தோற்றப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்களிடையே பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
