சர்வதேச அளவில் நிலவி வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள் மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து இடையூறுகள் காரணமாக, ‘வடக்கு கடல் வழித்தடம்’ தற்பொழுது உலக நாடுகளிடையே பெரும் மூலோபாய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஆர்டிக் பகுதியில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதால், இப் பாதை சர்வதேச வர்த்தகத்திற்குப் புதிய மாற்றுப் பாதையாக உருவெடுத்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீன சரக்குக் கப்பல்கள் இந்த வடக்கு கடல் வழித்தடத்தில் பயணிக்கத் தொடங்கியதிலிருந்து, ஆர்டிக் கப்பல் போக்குவரத்துப் பாதை உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தொடர் தாக்குதல்கள், ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான மிக விரைவான கடல்வழிப் போக்குவரத்தான சூயஸ் கால்வாய் வழித்தடத்தைப் கடுமையாகப் பாதித்தன. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரபு-இஸ்ரேலிய போருக்குப் பிறகு நிகழ்ந்த மிக தீவிரமான போக்குவரத்து இடையூறாக இது அமைந்தது.
ரஷியாவின் ஆர்டிக் கடற்கரைப் பகுதியில் பாரண்ட்ஸ் கடல் முதல் பெரிங் நீரிணை வரை சுமாராக 5,600 கி.மீ நீளத்திற்குப் பரவியுள்ள இத்தடம், முன்பு ஆண்டின் பெரும்பகுதி பயணிக்க முடியாததாக இருந்தது. ஆனால் தற்போது காலநிலை மாற்றத்தால் எளிதில் பயணிக்கக் கூடியதாக மாறி வருகிறது. ரஷியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களும், சூயஸ் கால்வாயில் நிலவும் மோதல்களும் சீன நிறுவனங்களுக்கு இப் பாதையை மிகவும் ஈர்ப்புடையதாக மாற்றியுள்ளன.
போர்க் காலங்கள் அல்லது மோதல்களின் போது உலகளாவிய தொடர்பை உறுதிசெய்ய, மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியக் குறுகிய கடல் வழித்தடங்கள் இல்லாத ஒரு பாதையைத் தேடும் சீனாவுக்கு இத்தடம் மிக முக்கியமானது. வியன்னாவைச் சேர்ந்த புவிசார் அரசியல் உத்தியாளரான வெலினா சக்கரோவா கூறுகையில், “வடக்குக் கடல் வழித்தடம் இல்லாவிட்டால், சீனா தனது இறக்குமதிகள் மீதான முற்றுகை மற்றும் இடையூறு போன்ற பெரும் அபாயங்களை எப்போதும் எதிர்கொள்ள நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்குச் சொந்தமான கோஸ்கோ குழுமத்தின் முதல் சரக்குக் கப்பல் 2013-இல் இத்தடம் வழியாகப் பயணம் செய்தது. தொடர்ந்து ‘நியூ நியூ ஷிப்பிங்’ நிறுவனம் வழக்கமான சேவையைத் தொடங்கியது. வழக்கமான சூயஸ் கால்வாய் வழியாகச் செல்ல சுமார் 45 நாட்களும், நன்னம்பிக்கை முனை வழியாகச் செல்ல சுமார் 60 நாட்களும் ஆகும். ஆனால், வடக்கு கடல் வழித்தடம் வழியாக சீனாவிலிருந்து ஐரோப்பிய துறைமுகங்களைச் சென்றடைய 30 நாட்களே ஆகின்றன. சில குறிப்பிட்ட பயணங்கள் வெறும் 20 நாட்களிலேயே நிறைவடைந்துள்ளன.
இந்தக் கோடைக்காலத்தில் மட்டும் சுமார் 38 சரக்குக் கப்பல்கள் சீனத் துறைமுகங்களிலிருந்து ஆர்டிக் வழித்தடம் வழியாகப் பயணம் செய்கின்றன. கடந்த ஆண்டில் 17 வணிகக் கப்பல் பயணங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜூலை முதல் அக்டோபர் வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் இந்த வடக்கு கடல் வழித்தடம், சூயஸ் கால்வாய் சரக்குகளுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தி அடைப்பு மற்றும் செங்கடல் தாக்குதல்கள் போன்ற உலகளாவிய நெருக்கடிச் சூழலில் இதன் மூலோபாய முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
