ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் லட்சக்கணக்கான மக்கள் கறுப்பு உடையில் கண்ணீருடன் திரண்டிருந்தனர். இந்த பிரம்மாண்ட மக்கள் கடலுக்கு நடுவே, அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டத்தின் இதயத்தையும் உலுக்கும் ஒரு கொடூரமான காட்சி அரங்கேறியது.
காமெனியின் சவப்பெட்டிக்கு மிக அருகிலேயே, ஈரான் தேசியக் கொடி போர்த்தப்பட்டு, வெறும் 10 கிலோ எடையுள்ள மிகச்சிறிய சவப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது எந்தவொரு ராணுவ வீரருக்கோ அல்லது தலைவருக்கோ உரியது அல்ல; அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி 28 அன்று இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட காமெனியின் 14 மாத பச்சிளம் பேத்தியான ‘ஸஹ்ரா முகமதி கொல்பயேகானி’ என்பவருடையதாகும்.
இந்த கொடூரத் தாக்குதலில் காமெனியுடன் சேர்ந்து அவரது மூத்த மகள், மருமகன் மற்றும் ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமெனியின் மனைவி ஆகியோரும் பலியாகியுள்ளனர். அவர்களின் சவப்பெட்டிகளும் வரிசையாக வைக்கப்பட்டிருந்த விதம் ஒட்டுமொத்த ஈரானையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தொடர்ந்து பல நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், ஜூலை 9 அன்று காமெனியின் சொந்த ஊரான மஷாத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. மறுபுறம், அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், ஈரானின் மீதான இந்த அதிரடித் தாக்குதலை அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கருதுவது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
