குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள குண்டாலா கிராமத்தில் வசித்து வந்த ராம் பரவாத் என்ற வாலிபர், கடந்த ஜூன் 30-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது தற்கொலை என்று அவரது பெற்றோரால் கூறப்பட்டது.

ஆனால், திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆன ராமின் மனைவி பன்ஷி, கணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டதில், ராம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியானது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியபோது, ராமின் பெற்றோரே இந்த கொடூர கொலையை செய்தது அம்பலமானது. காவல்துறையின் விசாரணையில், ராமுக்கு இருந்த குடிப்பழக்கம் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது தெரியவந்தது.

இதனால் சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த தாய் மனிஷாபென் தனது மகன் ராமை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, தந்தை பாபுபாய் அவரை கடுமையாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் இந்த கொலையை தற்கொலை போல ஜோடித்து, அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. தற்போது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, பெற்றோர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.