ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சுமார் 6 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு விலகிய முன்னாள் ஊழியர் ஒருவர், தான் வேலை செய்தபோது பழகிய நண்பர்கள் அனைவரும் தான் வேலையை விட்டு நின்றவுடன் முற்றிலும் தொடர்பை துண்டித்துக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
மேலும் “வேலையை விட்டு நின்ற பிறகு அழைப்புகள் இல்லை, தொடர்புகள் இல்லை, மெசேஜோ அல்லது மின்னஞ்சலோ கூட இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அலுவலகத்தில் நாம் உருவாக்கும் நட்புகள் அனைத்தும் உண்மையானவை அல்ல, பல நேரங்களில் அவை நாம் ஒன்றாக வேலை செய்கிறோம் என்ற சூழ்நிலைக்காக மட்டுமே நீடிக்கின்றன என்பதை இந்த பதிவு பிரதிபலிக்கிறது.
இது தற்போதைய கார்ப்பரேட் உலகில் பணிபுரியும் பல ஊழியர்களிடையே பெரும் விவாதத்தையும், சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவிற்கு இணையவாசிகள் பலரும் தங்களின் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
அதோடு சிலர் தாங்களும் இது போன்ற சூழ்நிலையைத் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்திருப்பதாகவும், அலுவலக நட்பு என்பது பெரும்பாலும் தேவை மற்றும் சூழ்நிலையின் கட்டாயத்தால் உருவாகும் ஒரு இராஜதந்திர உறவே தவிர, உண்மையான விருப்பங்களால் உருவாவது அல்ல என்று கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், இதற்கு விதிவிலக்காக சில நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் என்றும், 22 ஆண்டுகள் பணிபுரிந்து விலகிய பிறகும் சில நண்பர்கள் இன்னும் தங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும் ஒரு சிலர் தங்களது பாசிட்டிவான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.
