தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்து, கட்சி பிளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்துவிட்ட நிலையில், தற்போது எடப்பாடிக்கு எதிராக சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனது இல்லத்தில் மயிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி கட்டிய காரில் சில முக்கிய நிர்வாகிகள் வந்து சென்றதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த ரகசிய ஆலோசனையை முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம் மிகவும் ஆவேசமாகவும் நக்கலாகவும் பதிலளித்தார்.

அவர் பேசுகையில், “நான் அதிமுகவில் இருக்கிறேனா? இல்லையா? என்றுதானே நீங்கள் கேட்க வருகிறீர்கள். அதை நீங்கள் என்னிடம் கேட்பதை விட எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால், தற்போது நான் கட்சியில் இருக்கிறேனா இல்லையா என்பதே எனக்கே தெரியவில்லை. அதனால் அவரிடமே கேட்டு எனக்குச் சொல்லுங்கள்” என்று எடப்பாடி பழனிசாமியை நேரடியாகத் தாக்கிப் பேசியுள்ளார். சி.வி.சண்முகத்தின் இந்த அதிரடிப் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.